Friday, 2 August 2019


சிலப்பதிகாரத்தில் இசை

முனைவர் ப.ஸ்டாலின், எம்.ஏ.,பிஎச்.டி.,டி.லிட்
தகவல் அலுவலர்,
உலகத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.
               சிலப்பதிகா முத்தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் இசைச் செய்திகள் நிறைந்த ஒரு கருவுலமாகும். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் இரண்டறக் கலந்த சிலப்பதிகாரத்தின் பெருமையை நன்கு உயர்த்தியுள்ளது. அரங்கேற்று காதை, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, கானல்வரி ஆகிய பகுதிகளில் காணப்படும் செய்திகள் இசை இலக்கணம் தொடர்பானவை. இவற்றைத் தவிர மங்கல வாழ்த்துப்பாடல், மனையறம் படுத்த காதை, கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை ஆகிய பகுதிகளில் இசைப்பதற்குரிய பாடல்கள் நிறைந்துள்ளன. காப்பியத்தின் முதல் காதையே மங்கல வாழ்த்துப் பாடல் என அழைக்கப்படுகின்றது. இதன் தொடக்கப் பகுதி நான்கு சிந்தியல் வெண்பாவால் ஆனது. இவை அனைத்தும் இசைக்கக் கூடிய இனிமையான பாடல்களாகும்.

               மேலும் கானல் வரிப்பாடல்கள், வேட்டுவ வரிப்பாடல்கள், ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள், குன்றக் குரவைப்பாடல்கள் என்பன கூத்துடன் கலந்த அருமையான பாடல்கள். அக்கால இசை மரபை வெளிக்கொணரும் பாடல்களாக அவை காணப்படுகின்றன. மக்கள் மத்தியில் பெரு வழக்காக உள்ள கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப் பாட்டு, என்பன நாட்டுப்புற மரபைப் பின்பற்றி எழுதப் பெற்றவைகளாகத் தேன்றுகின்றன.
          'பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்
                                                        (29, 26, 5)
என்ற அடி வெள்ளைப்பாட்டு பாவையார் மகிழ்ந்து பாடும் பாடல் என்ற குறிப்பைத் தருவதாகும்.
                                               'குடங்கை நெடுங்கண்பிறழஆடாமோ ஊசல்
                                                                                            (29; 23; 4)
                                              'கார் செய் குழலாட ஆடாமோ ஊசல்
                                                                                            (29; 24; 4)
                                              மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல்
                                                                                            (29; 25; 4)
               போன்ற அடிகள் மங்கையர் மகிழ்ந்துபாடும் ஊசல் பாட்டை நினைவுபடுத்துவனவாகும். சாதாரண மக்களின் இசை வழக்குகளை நன்கு அறிந்த இளங்கோஅடிகள் முறைப்படுத்தப் பெற்ற இசை முறைமை, விதிமுறைகளையும் சிறப்பாக அறிந்து நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் பல இசைக் குறிப்புகளையும் தந்துள்ளார்.
               ஆடலும் பாடலும் கலைநிலையிலும் அமைப்புமுறையிலும் இருவேறுபட்ட கலைகளாயினும் உணர்விலும் உறவு நிலையிலும் இரட்டைக் கலைகளாக கருதப்படுகின்றன. அவை தனித்து இயங்குவதைவிட இணைந்து இயலும் போது பயனும் சுவையும் மிகுதியான இன்பத்தை தரவல்லதாகையால் அடிகளார் பல இடங்களில் இவ்விரு கலைகளின் இணைவையும் இன்பக் கலப்பையும் இயல்பாகவும் இனிதாகவும் விளக்கிக் காட்டுகின்றார்.
               அரங்கேற்றுக்காதையில் இசை யாசிரியன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழாசிரியன், கவிஞன் ஆகியோரின் இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆடலாசிரியன் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள் ஆடல், இசை ஆகிய இரு கலைகளிலும் பயிற்சி தேவை என வலியுறுத்திக் கூறுகின்றார்.
இருவைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புனர்த்து
பதினோராடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தால்
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்தும் காலை
                                              (சிலப்; 3; 12-17)
எனக் கூறும் இளங்கோவடிகள் தேசி, மார்க்கம் ஆகிய இருவகை கூத்துக்களின் அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டு மெனவும் வலியுறுத்துகிறார்.
"யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கம் உரிப்பொருள் இயக்கி"
                                              (3; 26-29)
என்ற அடிகள் வாயிலாக இசையாசிரியனுக்குரிய இலக்கணத்தை கூறுகின்றார். "ஆடலுக்குரிய பாடல்களை நன்கு உணர்ந்து இசை கூட்டும் ஆசிரியர் இசையுணரும் ஆற்றலுடையவராகவும் இசைபுணர்க்கும் திறமையுடையவராகவும் இருத்தல் வேண்டும். யாழ்ப்பாடல், குழல்பாடல் (வங்கியப்பாடல்), இருவகையான தாளங்களின் கூறுகள், மிடற்றுப்பாடல், தண்ணுமையின் தாளவிசைக்கூறுகள் அனைத்தையும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். இருபிரிவு பாடல்களுக்குப் பொருளான இயக்கம் நான்கினையும் (முதனடை, வாரம், கூடை, திரள்) அறிந்து இசை புணர்த்தல் வேண்டும். மேலும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கு வகையிலும் இசை இணைவிக்கும் திறமை வேண்டும்.
               தண்ணுமை ஆசிரியன் பற்றி கூறுமிடத்து அனைத்து கூத்துக்கள், பாடல்கள், இசைகள், ஆகியவற்றின் கூறுபாடுகளை அறிந்திருப்பதுடன் இருவகைத் தாளங்கள், ஏழுவகைத் தூக்குகள் ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும். யாழ், குழல், வாய்ப்பாட்டு என்பவற்றுடன் தண்ணுமை இணைந்திருத்தல் வேண்டும். மற்ற கருவிகளுடன் சேர்ந்து அவற்றின் குறைநிரப்பி, அக்கருவிகளின் மிகையடக்கி, ஆக்குமிடத்திலும் அடக்குமிடத்திலும் இசைக்கேற்ப வாசித்தல் தண்ணுமை யோனின் சிறப்புஎனக் கூறுகிறார். ஆடல், பாடல், இசை, தமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் ஆகிய ஒன்பது கூறுகளைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்கள் பற்றியும் அறிந்து தண்ணுமை ஆசிரியர்கள் தொழிற்படவேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார்.

               பண்ணிசைக் கருவிகளில் யாழை அடுத்து மிகச் சிறப்புடன் விளங்கும் குழலைப் பற்றியும் விளக்கமாக இளங்கோவடிகள் கூறுகின்றார். பல வகையான குழல்கள் பற்றியும் குழலை எவ்வாறு வாசிக்கவேண்டும் என்றும் விளக்கம் அளிக்கின்றார். இளங்கோவின் காலத்தில் யாழ்மிகச்சிறந்த இசைக் கருவியாக மதிக்கப்பட்டது. அதில் இசையமைத்துப் பண்படைத்துக் காட்டும் பாங்கினை மிக விளக்கமாக சிலப்பதிகாரத்தில் கூறுகின்றார். யாழாசிரியனது திறமைகளை விளக்கும்போது அக்காலப் பண்ணிசை வழக்கங்களையும் விளக்குகிறார். கானல்வரியில் மாதவி யாழிசை மீட்டுவதை மிக விரிவாக விளக்குகிறார்.
பண்ணல் பரிவட்டனை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூர்
நண்ணிய குறும் போக்கென்று நாட்டிய
எண்வகையால் இசையெழீஇப்
பண் வகையால் பரிவு தீர்ந்து
மரகத மணித் தாள் செறிந்த மணி காந்தன் மெல்விரல்கள்
பயிர் வண்டின் கிளை போலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் நெருட்டல் அள்ளல்
எருடைப் பட்டடையென இசையோர் வகுத்த
 எட்டுவகையி சைக்கரணத்துப்
பட்டவகைதன் செவியினோர்த்
தேவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
                                              (சிலப்; 7; 5-18)
இவ்வாறு யாழ் மீட்டுவதற்குரிய விதிகளைக் குறிப்பிடுகிறார்.
               கானல்வரியில் பலவகையான வரிப்பாடல்களை எழுதியுள்ளார். வரி என்பது பாடல், ஆடல் ஆகிய இரு கலைகலையும் குறிக்கும்.வேட்டுவ வரி ஆடலையும் கானல்வரி பாடலையும் குறிப்பிடுகின்றன. வரிப்பாடல்கள் யாழ் மீட்டி அதன் இசைக்குத் தக்கவாறுபாடப்படுவதாகத் தோன்றுகிறது.
               சங்கப் பாடல்களில் வீணை என்ற இசைக் கருவி பற்றிய குறிப்பு இல்லாவிடினும் சிலப்பதிகாரத்தில் வீணை பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.
நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை நயந்தெரி பாடலும்
                                            (: 6; 18-23)
மேலும் வேனிற் காதையில் குரல் - இளி முறையில் (ஸ்-ப முறை) பன்னிரு ஸ்வர நிலைகளை பழந்தமிழ் மக்கள் எவ்வாறு கண்டு பிடித்தனர் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"வரன் முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழை முதலாகவும் உழையிறாகவும்
குரல் முதலாகவும் குரலிறாகவும்
                                           (வேனிற் காதை 36-38)
               ஆய்ச்சியர் குரவைக்கூத்து நிகழ்ச்சியில் எவ்வாறு மாதரி ஏழு பெண்களை நிறுத்தி அவர்களுக்கு குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்டாள் என விவரித்துள்ளார். மேலும் ஒரு இயக்கிலுள்ள குரல், துத்தம், கைக்கிளை முதலிய ஒவ்வொரு ஸ்வரத்தையும் குரலாக அதாவது ஆதாரசுருதியாக வைத்து ஏழு பெரும்பாலைப் பண்களை வகுத்தனர். இம்முறை பண்ணுப் பெயர்த்தல், எனப்படுகின்றது. தற்காலத்தில் கிரகபேதம் என்றும் மேற்கத்திய இசையில் Model Shift of Tonic முறை எனவும் அழைக்கப்படுகின்றது. இம்முறை பற்றி இளங்கோவடிகள் கானல் வரியில்
தீத் தொடைச் செவ்வழிப் பாலை எழீஇப்
பாங்கினில் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள்
                                            (கானல்வரி அடி 49, 5O)
எனக் கூறியுள்ளார்.
               பல இசை ஆய்வாளர்கள் சிலப்பதிகாரப் பாடல்களை இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளனர். டாக்டர் எஸ்.இராமநாதன் சிலப்பதிகாரத்து ‘ஆய்ச்சியர் குரலைப் பாடல்கள் (1968) என்னும் நூலில் ஆய்ச்சியர் குரவைப் பகுதியிலிருந்து சில பாடற் பகுதிகளை எடுத்து மோகனம், மத்திய மாலதி, ஹிந்தோளம், சுத்தஸாவேரி, சுத்த தன்யாஸி ஆகிய இராகங்களில் இசையமைத்துள்ளார். சிலப்பதிகாரத்தின் யாப்பமைதியை ஆராய்ந்த டாக்டர் ந.வீ.செயராமன் 6 இசைக் கூறாகப் பிரித்து (மங்கல வாழ்த்து, கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை) 56 இசைப்பாடல் வகைகளை இனங்கண்டு அப்பாடல்களின் யாப்பினை ஆராய்ந்துள்ளார். பேராசிரியர் டாக்டர் எஸ்.சீதா சிலப்பதிகாரத்தில் ஒன்பது சுவைகளை உணர்த்தும் வகையில் பாடல்களைத் தெரிந்தெடுத்து ஒன்பது இராகங்களில் இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அவர்களும் 'சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப் பாடல்கள் என்னும் நூலில் சில பாடல்களை ஸ்வரதாளப் படுத்தியுள்ளார்.

துணை நூற்பட்டியன்
1. அங்கயற்கண்ணி.இ –சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்
2. இராமநாதன்.எஸ் – சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்
3. சேலம் செயலட்சுமி.எஸ் – சிலபத்தி காரத்தில் இசைச் செல்வங்கள்
4. தனபாண்டியன்.து.ஆ – இசைத்தமிழ் வரலாறு பகுதி1
5. பெருமாள் ஏ.என் - தமிழர் இசை :


உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்குப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நாற்ப...